டிசம்பர் 26 சுனாமி தாக்கிய நாள். அதே நாளில் இராமநாதபுரம் மாவட்டமே மீண்டும் சோகத்திற்குள்ளாகியுள்ளது.
இராமநாதபுரம் அருகே உள்ள கடலோர கிராமம் பெரிய பட்டிணம். பெரிய பட்டிணத்தை பூர்வீகமாகக் கொண்ட அப்துல் குத்தூஸ், கடந்த 20 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். விடுமுறையை கழிப்பதற்கு தாயகமான பெரிய பட்டிணம் வந்தார். பெரிய பட்டிணத்திற்கு அருகே உள்ள 10 கி.மீ தொலைவிலுள்ள அப்பா தீவினை பார்ப்பதற்கு தமது உற்றார் உறவினர் 40க்கும் மேற்பட்டோருடன் டிசம்பர் 26 காலை 8.30 மணியளவில் பெண்களும், குழந்தைகளும் ஒரு படகிலும், ஆண்கள் ஒரு படகிலும் இரண்டு நாட்டுப் படகில் அப்பா தீவிற்கு சென்றனர்.
தீவினை நெருங்குவதற்குள் முதலில் சென்ற படகை திடிரென ஒரு அலை தாக்கியது. அலை தாக்கியதும் படகில் இருந்தவர்கள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் இடம் பெயர்ந்தார்கள். இதனால் படகின் பாரம் முழுவதும் ஒரே பக்கத்தில் இருந்ததால் நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் இருந்த பெண்களும், குழந்தைளும் கடலில் மூழ்கத் துவங்கியது. இரண்டாவதாக படகில் வந்தவர்கள் கடலில் குதித்து மூழ்கிக் கொண்டு இருப்பவர்களை மீட்கத் துவங்கினர். உடனே செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவி கோரியதும் கரையில் இருந்தவர்கள் அப்பா தீவினை நோக்கிப் படகுகளில் புறப்பட்டனர். இதில் தமுமுக தொண்டர்களும் அடக்கம்.
இதற்கிடையில் இரண்டாவது படகில் சென்றவர்கள் மூழ்கியவர்களை மீட்டு தாங்கள் சென்ற இரண்டாவது படகில் ஏற்றினர். இதனால் இரண்டாவது படகினில் நெரிசல் அதிகமானதால் ஆண்கள் படகின் விழிம்பை பிடித்து தத்தளிக்கத் துவங்கினர்.
கரையில் இருந்து வந்த மீட்புப்படகுகள் கடலில் முழ்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு கரைக்குத் திரும்பியதும், கரையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவிற்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. பெரிய பட்டிணத்தில் இருந்த மருத்துவமனையிலோ ஒரே ஒரு செவிலியரைத் தவிர பெயருக்கு கூட மருத்துவர் கிடையாது. இதனால் கடலில் மூழ்கியவர்களை இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை. இதனால் கடலில் முழ்கியவர்களுக்கு முதல்உதவி செய்வது தாமதமானதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமானது. இந்த துயரச் சம்பவத்தினால் மொத்தம் 15 பேர்கள் உயிரிழந்தனர். இதில் 11பேர்கள் பெரிய பட்டிணத்தையும், இருவர் கீழக்கரையையும், மற்ற இருவர் பரமக்குடியையும் சேர்ந்தவர்கள்.
தாமதமாக வந்த அரசு இயந்திரங்கள் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலமாக மீட்புப்பணியில் ஈடுபட்டது. இதில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்கு மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஒரு வழியாக ராமநாதபுரம் அமைச்சரும், எம்.எல்.ஏவும் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பதற்கு கடைசியாக வந்து சேர்ந்தார்கள். இதில் சற்று தள்ளு ஏற்பட அதை பொது மக்களே தடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
ஆட்டினால் ஏற்பட்ட விபத்தா?
படகில் இரு ஆடுகளும், உணவு தயாரிக்க தேவையானப் பொருட்களும், சமையல் பண்டங்களையும் படகினில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஆடு அலையைப் பார்த்து பயந்து கடலில் குதித்தாகவும், அதைக் காப்பாற்ற ஏற்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளன என்பதை பெரிய பட்டிணத்து மக்கள் மறுக்கின்றனர். மேலும் கொண்டு செல்லப்பட்ட இரண்டு ஆடுகளும் உயிருடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய மாயை!
படகில் சென்று மரணித்தவர்கள் ஆஸ்திலேலிய குடியுரிமை பெற்றவர்கள் என்று ஊடகங்கள் ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கின. இதில் அப்துல் குத்தூஸ் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பெரிய பட்டிணத்துவாசிகளே. மேலும் இவர்கள் அனைவரும் பொருளாதார வசதிகளில் பின்தங்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வெகு அருகாமையில் இருக்கக் கூடிய மன்னார் வளைகுடா தீவுகளில் மனிதர்கள் செல்ல அனுமதியில்லை. இத்தீவுகளில் மனிதர்களின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டிய கடலோர காவல்படையும் முறையாக தங்களின் பணிகளை செய்வதாகவும் தெரியவில்லை. கடலோரக் காவல்படையினர் முறையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்களேயானால் இத்தகைய அசம்பாவிதங்களையும் தவிர்த்திருக்கலாம். மேலும் சம்பவம் நடந்து தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னரே கடலோர காவல்படையினர் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீட்புப் பணியில் தமுமுக
தகவல் கிடைத்தது தமுமுகவின் 6 அவசர ஊர்தியும், 30 பேர் கொண்ட தமுமுக தன்னார்வ தொண்டர்களும் களப்பணியில் ஈடுபட்டது. இராமநாதபுரம் தாலுகா தாசில்தார் ராமச்சந்திரன் நாங்கள் வருவதற்கு முன்னரே தமுமுகவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதை பாராட்டினார். படகின் மூலம் மீட்புப் பணியிலும், தேடுதல் பணியிலும் பெரிய பட்டிணம் ம.ம.க செயலாளர் நசீர் தலைமையில் ஒரு குழு ஈடுபட்டு நான்கு பேர்களை மீட்டனர். இராமநாதபுரம் (கி) மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அன்வர் ஆகியோர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
கரையில் தயாராக இருந்த தமுமுகவின் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். பின்நேரங்களில் இறந்தவர்களுக்கு தமுமுகவின் பிரிஜர்கள் (இறந்தவர்களுக்கான குளிரூட்டி) பயன்படுத்தப்பட்டன. மின்தடையை அகற்ற தமுமுக சார்பில் ஜெனரேட்டர்களை கொண்டு வரப்பட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக