[02] வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்
மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானதுநிச்சயமாக அல்லாஹ், சுவர்க்கவாசிகளை நோக்கி, சுவர்க்கவாசிகளே! என்றழைப்பான். அதற்கவர்கள், லப்பைக வஸஃதைக வல்கைரு பியதைக எங்கள் இரட்சகனே!(இதோ)உன் சமுகத்தில்(நாங்கள்) ஆஜராகிவிட்டோம். அனைத்து நன்மைகளும் உன்னுடைய கரங்களிலேயே இருக்கிறது. என்று கூறுவார்கள்.
பின்னர், அல்லாஹுத்தஆலா அவர்களிடம் உங்களுக்குத் திருப்திதானே! என்று கேட்பான். அதற்கவர்கள், எங்களுடைய இரட்சகனே! நாங்கள் எப்படி திருப்தியடையாமல் இருப்போம்! நிச்சயமாக நீ உன் படைப்புகளில் எவருக்கும் கொடுக்காத அருட்கொடைகளையும் நற்பாக்கியங்களையும் எங்களுக்குக் கொடுத்து விட்டாய் என்று கூறுவர்.
அப்பொழுது, அல்லாஹுத்தஆலா அதை விட மிக மேலான ஒன்றை நான் உங்களுக்குத் தரட்டுமா? என்று கேட்பான். அதற்கவர்கள், அதைவிட மேலான பொருள் என்ன? என்று (ஆச்சரியத்துடன்) கேட்பார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா, நான் உங்களின் மீது ரிள்வான் எனும் என்னுடைய திருப்பொருத்தத்தை இறக்கிவைக்கிறேன் (அதுவே எல்லாவற்றையும் விட மிக மேலானது) அதற்குப் பிறகு ஒரு பொழுதும் நான் உங்களிடம் கோபிக்கமாட்டேன் என்று கூறுவான்.
புகாரி, முஸ்லிம்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி)
சுவர்க்க கதவுகளின் எண்ணிக்கைகள்
சுவர்க்கத்திற்கு எட்டுக் வாசல்கள் உள்ளன.
சுவர்க்கத்திற்கு எட்டுக் வாசல்கள் உள்ளன, அவைகளில் ஒரு கதவிற்கு 'அர் ரைய்யான்' என்று சொல்லப்படும். அதன் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கக் கதவின் விசாலம்.
சுவர்க்கத்திலுள்ள கதவுகளின் இரு ஓரங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி மக்காவிற்கும் ஹிஜ்ர் என்ற இடத்திற்கு மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். அல்லது ஹிஜ்ர் என்ற இடத்திற்கும் மக்காவிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில்: மக்காவிற்கும் ஹிஜ்ர் என்ற இடத்திற்கு மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். அல்லது மக்காவிற்கும் பஸராவிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தின் இரு வாசல்களுக்கு மத்தியிலுள்ள தூரம்
சுவர்க்கத்திலுள்ள இரு வாசல்களுக்கு மத்தியில் உள்ள தூரம் எழுபது ஆண்டுகள் ஒரு குதிரை வீரர் பிரயாணம் செய்யும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சுவர்க்கத்தின் படித்தரங்கள்
1. சுவர்க்கத்தில் நூறு அந்தஸ்த்துக்கள் உள்ளன, அவைகளின் இரு அந்தஸ்துக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளி இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
2. அடிவானத்திலுள்ள நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போல் சுவர்க்கவாசிகள் மற்ற (அந்தஸ்து சுவர்க்கவாசிகளை) அறைகளில் (இருந்து கொண்டு) ஒருவருக்கொருவர் பார்ப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி, முஸ்லிம்
சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதன்
நபி மூஸா(அலை) அவர்கள் தம், இரட்சகனிடம் சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதனின் நிலை எவ்வாறு? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹுத்தஆலா, சுவர்க்கவாசிகள் சுவனத்தில் நுழைந்து முடிந்த பின் அம்மனிதன் வருவான். அவனையும் சுவர்க்கத்தில் நுழைந்து கொள்ளுமாறு கூறப்படும். அவனோ! என் இரட்சகனே! சுவனவாசிகள் அனைவரும், தங்கள் இடங்களில் போய் இறங்கி, அவரவர்களின் இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். (சுவர்க்கம் முழுதும் நிரம்பி விட்டது) நான் எங்குப் போய் தங்குவேன்? எனக் கேட்பான். அதற்கு அல்லாஹுத்தஆலா, அடியானே! உலகின் அரசர்களில் ஒரு அரசனின் ஆட்சியைப் போன்ற அளவு உமக்கு சுவர்க்கத்தில் இடம் கிடைப்பதை ஏற்று நீ திருப்திப்பட்டுக் கொள்கிறாயா? என்று கேட்பான். அதற்கவன், என் இரட்சகனே! நான் பொருந்திக் கொள்கிறேன் என்று கூறுவான். அப்பொழுது அல்லாஹ், அந்த அரசனின் ஆட்சியைப் போன்றும், மேலும் அது போன்றும், அது போன்றும், அது போன்றும், அது போன்றும் உள்ள(நான்கு)ஆட்சிகளின் விஸ்தீரண அளவும் கிடைக்கும், என்று கூறுவான்(மொத்தம் ஐந்து ஆட்சிகளின் விஸ்தீரண அளவு கிடைக்கும்) ஐந்தாவது முறையில் அவ்வடியான், என் இரட்சகனே! நான் பொருந்திக் கொள்கிறேன் என்று கூறுவான். அப்பொழுது அல்லாஹ் உமக்கு இதுவும், இன்னும் பத்து ஆட்சிகளுடைய விஸ்தீரண அளவும் கிடைக்கும். உம் மனம் விரும்பும் ஒவ்வொரு பொருளும், உம் கண்கள் விரும்பும் ஒவ்வொரு இதமான காட்சிகளும், உமக்கு இங்கு உண்டு என்று கூறுவான். அப்பொழுது, அவ்வடியான் என் இரட்சகனே! நான் அவற்றைப் பொருந்திக் கொண்டேன் என்று கூறுவான். பின்னர், நபி மூஸா(அலை) அவர்கள் சுவர்க்கவாசிகளில் மிக மேலான அந்தஸ்துடையவர்களின் நிலை என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், நான் நாடி என் கரத்தாலேயே, அவர்களின் கண்ணியத்தை நட்டு வைத்துள்ளேன். (நிலைநாட்டியுள்ளேன்) அதில் நான் முத்திரையும் இட்டுள்ளேன். (நான் அதனைப் பாதுகாத்து வைத்துள்ளேன்.) மாபெரும் அந்தஸ்துகள் எத்தகையவை என்றால், எந்தக் கண்களும் அவைகளைக் கண்டதில்லை. எந்தக் காதுகளும் அவைகளைக் கேட்டதில்லை. எந்த உள்ளங்களிலும் அவை போன்ற சிந்தனை எழுந்ததில்லை என்று கூறினான். (முஸ்லிம்)
நரகிலிருந்து எல்லோரையும் விடக் கடைசியாக வெறியேறி – சுவர்க்கத்தில் எல்லோரையும் விடக் கடைசியாக நுழையும் மனிதனைப் பற்றி நான் அறிவேன். அவன் கை, கால்களால் தவழ்ந்தவனாக நரகிலிருந்து வெளியே வருவான். அப்பொழுது அல்லாஹ் அவனிடம், நீ போய் சுவர்க்கத்தில் நுழைவாயாக! என்று கூறுவான். அதன்படி அவன் சுவர்க்கத்திற்குச் செல்வான். அங்கு அது முழுவதும் நிரம்பி விட்டது போன்று அவனுக்குத் தோன்றும். உடனே அவன் வெளியில் திரும்பி வந்து, என் இரட்சகனே! சுவர்க்கம் நிரம்பி விட்டது. அதற்கு அல்லாஹு, (என் அடியானே!) நீ சென்று சுவனத்தில் நுழைவாயாக! என அவனுக்குக் கூறுவான். அதன்படி அவன் சுவர்க்கத்திற்கு (மீண்டும்) செல்வான். (முதன்முறை தோன்றியது போன்று) இம்முறையும், சுவர்க்கம் நிரம்பி விட்டதைப் போன்று அவனுக்கு தோன்றும். அதனைப் பார்த்து விட்டு, அவன் திரும்பி வந்து, என் இரட்சகனே! சுவனம் நிரம்பி விட்டது என்று கூறுவான். அதற்கு வலுப்பமும் கண்ணியமும் உள்ள அல்லாஹ், (அடியானே!) நீ சென்று சுவனில் புகுவாயாக! நிச்சயமாக உமக்கு உலகைப் போன்றும், அதற்கு மேலும், அது போன்று பத்து மடங்கு அளவும் சுவர்க்கத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது உலகைப் போன்று பத்து மடங்கு அளவு உமக்குச் சுவர்க்கத்தில் இடமளிக்கப் பட்டுள்ளது என்று கூறுவான். அதற்கவன், யா அல்லாஹ்! நீ என் எஜமானனாக இருக்கும் நிலையில், நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைப் பார்த்துச் சிரிக்கிறாயா? எனக் கேட்பான். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) கூறுகிறார்கள்: இதனைக் கூறும் பொழுது, அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் கடைவாய்ப் பற்கள் வெளிப்படும்படி சிரித்ததை நான் பார்த்தேன். பின்னர் கூறினார்கள். இம்மனிதன் தான் சுவனவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள, கடைசி மனிதனாவான், எனப் பகர்ந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவனத்தின் ஒரு சிறு பகுதியின் மதிப்பு
சுவனத்தில் ஒரு வில்லின் அளவு இடம் சூரியன் எவற்றின் மீது உதயமாகி, மறைகிறதோ அதனை விட(உலகம், மற்றும் அதன் மீதுள்ள அனைத்துப் படைப்புகளையும் விட) மேலானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி, முஸ்லிம்
ஒளி சிந்தும் சுவன அறைகள்
நிச்சயமாக சுவனவாசிகள், சுவனத்தின் அறைகளை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஒளி சிந்துபவர்களாக) பார்ப்பார்கள்.(அவ்வறைகளில் தங்கியிருக்கும் சுவன வாசிகளும் ஒளிவீசுபவர்களாக இருப்பர்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களுடன் ஒரு அவையில் ஆஜராகி இருந்தேன். அதில் அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி விளக்கமாக கூறினார்கள். அவர்களுடைய பேச்சின் கடைசியில் கூறினார்கள். சுவனத்தில், கண்கள் பார்த்திராத அளவு, காதுகள் கேட்டிருக்க முடியாத அளவு, எந்த மனிதரின் உள்ளத்தின் சிந்தனைகளிலும் தோன்றிராத அளவு உயர்ந்த எல்லாப் பொருள்களும், உன்னதமான இன்பங்கள் அனைத்தும் உள்ளன. பின்பு நபி(ஸல்) அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன்: 32:16)
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது (அல்குர்ஆன்: 32:17)
என்றும் இளமை, என்றும் மகிழ்ச்சி
சுவனவாசிகள், சுவனத்தில் நுழைந்ததும், ஒரு மலக்கு அனைவரையும் அழைத்து, சுவர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஜீவித்து இருப்பீர்கள். ஒரு பொழுதும் மரணிக்க மாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு எப்போதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு பொழுதும் நோயாளியாக ஆகமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு வாலிபமாகவே இருப்பீர்கள். ஒரு பொழுதும் வயோதிக(முதுமை)அடையமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு பொழுதும் கஷ்டப்படமாட்டீர்கள் என்று கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்கத்தில் உங்களில் மிக தாழ்ந்த அந்தஸ்து உடைய ஒருவரின் நிலையாகிறது, அவருக்கு அல்லாஹுதஆலா, நீ விரும்புவதை ஆசைப்படுவாயாக! எனக் கூறுவான். அவர் ஆசைப்படுவார். பின்னரும் ஆசைப்படுவார். பின்னர், அவரிடம் அல்லாஹுத்தஆலா நீ ஆசைப்பட்டாயா? என்று கேட்பான். அதற்கவர் ஆம் என்று கூறுவார். அப்பொழுது அல்லாஹுத்தஆலா நிச்சயமாக நீ ஆசைப்பட்டது உனக்கு உண்டு. அது போன்று மற்றொரு மடங்கு சேர்த்து உண்டு என்று கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்
சுவர்க்கத்து கன்னியர்கள்
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 55:56
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். 55:58
ஹுர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். 55:72
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 55:74
நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, அப்பெண்களைக் கன்னிகளாகவும் (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). 56:35-38
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். 37:48,49
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.ஒரே வயதுள்ள கன்னிகளும்.பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). 78:31,32,33,34
சுவர்க்கத்தின் மண், கற்கள், சிறுகற்கள், கட்டிடம்
1. சுவர்க்கத்தின் ஒரு கல் தங்கமும் இன்னும் மற்றக் கல் வெள்ளியுமாகும், அதனின் சாந்து கஸ்தூரியாகும், அங்கு கிடக்கும் சிறு கற்கள் மருகதமும் பவளமுமாகும், அதன் மண் குங்குமமாகும், அதனுள் நுழைபவர் சந்தோசமடைவார் துற்பாக்கியமுடையவராகமாட்டார். நிரந்தரமாக அங்கிருப்பார் மறணிக்கமாட்டார். அவரின் ஆடைகள் இத்துப்போகாது, அவர் வாலிபத்தை இழக்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
2. நான் சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டேன், அங்கே முத்தினாலுள்ள கோபுரம் இருந்தது. அதன் மண் கஸ்தூரியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்க வாசிகளின் முத்துக் கூடாரம்
சுவர்க்கத்திலே கொடையப்பட்ட (ஒரே) முத்தினாலுள்ள ஒரு கூடாரமுண்டு, அதன் விசாலம் 60 மைலாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் மனைவியர் இருப்பர், ஒருவர் மற்றொருவரை பார்க்க முடியாது. அவர்களிடம் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அவர்களின் கணவர்கள்) செல்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்ஷா அல்லாஹ் தொடரும் …
நன்றி- இஸ்லாம் கல்வி.காம்,
அன்புடன்,
என்றும் அழைப்புப் பணியில்,
முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துபாய்.
Very Nice :)
பதிலளிநீக்கு