
பிரபல மருத்துவரும், மக்கள் குடியுரிமை கழகத்தின் துணைத் தலைவர் (PUCL) டாக்டர். பினாயக் சென் அவர்களுக்கு பொய் குற்றசசாட்டின் அடிப்படையில் ராய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதற்கு தமுமுக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.
கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்ற குற்றவாளிகளை எல்லாம் தப்ப விட்டுவிட்டு, ஏழை, எளிய பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றவே தன் வாழ்வை அர்பணித்துக் கொண்ட பினாயக் சென்னுக்கு ராஜதுரோக வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியிருப்பது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் அம்பலப்படுத்தியுள்ளது.
சிறையில் இருந்த மாவோயிஸ்ட் தலைவர் சன்யாள் எழுதிய கடிதத்தை இவர் வைத்திருந்தார் என்றும், சிறையில் இருந்த சன்யாள் கூறிய செய்திகளை அவர்களது சகாக்களுக்கு தெரிவித்தார் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2007 ஆம் ஆண்டு டாக்டர். பினாயக் சென் கைது செய்யப்பட்டபோது, நோபல் பரிசு பெற்ற 22 மேதைகள் இந்த அராஜகத்தை கண்டித்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. பினாயக் சென்னிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் போலியானது. அதனை போலீசாரே அவர் வீட்டில் வைத்து விட்டு பின்னர் எடுத்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் கூறப்பட்டன.
பினாயக் சென் சிறையில் இருந்த மாவோயிஸ்ட் தவைவர் சன்யாளை சிறை அதிகாரியின் அனுமதியின் பெயரிலும் அவர்களின் முன்னிலையிலும் தான் சந்தித்துள்ளார். இத்தகைய குற்றச்சாட்டை கூறி மனித உரிமை போராளியும், அடிதட்டு மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவருமான டாக்டர் பினாயக் சென்னை தண்டித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அவர் உடனடியாக மேல்முறையீட்டுக்கு போவதை தடுக்க தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருவதற்கு முந்தைய கடைசி வேலை நாளில் இத்தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இது தெளிவான பழிவாங்கல் நடவடிக்கையாக தெரிகின்றது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் டாக்டர். பினாயக் சென் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமுமுக கோருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக