
கடந்த செவ்வாய்க்கிழமை (18.01.2011) மத்தியகிழக்குப் பிராந்திய அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடரும் இஸ்ரேலிய சட்டவிரோத குடியிருப்பு விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்துவதற்கு சர்வதேச சக்திகள் முன்வரவேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயத்தில் உலகின் அரசியல் சக்திகள் நீண்ட மௌனம் சாதித்துவருவது பற்றி மேற்படி குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
பலஸ்தீனர்களின் நியாயமான உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பெரும் முனைப்புடைய இக் குழு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் பலஸ்தீனர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டும், அவ்விடங்களில் எல்லாம் சட்டவிரோத யூதக் குடியிருப்புக்கள் நிறுவப்பட்டும் வருவதானது மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்படுவதை மேலும் தாமதிக்கவே உதவும் என்றும், சர்வதேச சக்திகள் தலையிட்டு சட்டவிரோத இஸ்ரேலியக் குடியிருப்பு விரிவாக்கத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தும்வரை இந்நிலை தொடரவே செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா.வின் மேற்படி மனித உரிமைகள் குழு 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும். சர்வதேச சமூகமானது பலஸ்தீன் விடயத்தில் அலட்சியம்காட்டி வருவது குறித்தும், இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியிருப்பு விஸ்தரிப்பைத் தடுத்து நிறுத்துவது தொடர்பில் உரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தவறிவிட்டமை பற்றியும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி மேற்படி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில், இஸ்ரேல் 2012 ஆம் ஆண்டுக்கான சட்டவிரோதக் குடியிருப்பு விஸ்தரிப்பின் பொருட்டு 500 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளமையானது, இனியும் அது தன்னுடைய சட்டவிரோதப் போக்கையும், மனித உரிமை மீறலையும் தடையின்றித் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதை உணர்த்துவதோடு, பலஸ்தீனர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை அர்த்தமற்றதாக்கி, 1967 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைகளின் அடிப்படையில் இருதேசத் தீர்வு குறித்த தீர்மானத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக