நபித் தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அனைத்தையும் இழந்த ஏழை யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? ‘என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கேட்டார்கள். ‘எவரிடம் வெள்ளிக் காசும் பொருள்களும் இல்லையோ அவரே எங்களில் அனைத்தையும் இழந்த ஏழை’ என்று நபித் தோழர்கள் கூறினார்கள். ‘என் சமுதாயத்தில் ஏழை என்பவன் மறுமை நாள் விசாரணையின் போது தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகிய (கடமைகளை நிறைவேற்றிய)நன்மைகளுடன் (சுவனம் செல்ல)வருவான்.
(அந்நேரத்தில்) இவன் ஏசினான். இவனை பற்றி இட்டுகட்டினான், இவன் பொருளை (அநியாயமாக) சாப்பிட்டான், இவனை (கொலை செய்து) இரத்தத்தை ஓட்டினான், இவனை அடித்தான் என (நல்லறங்கள் செய்தவனுக்கு எதிராக) குற்றம்சாட்டும் நிலையில் (பாதிக்கப்பட்ட ஒருவன்) வருவான். அப்போது நல்லறங்கள் புரிந்தவனின் நன்மைகளை எடுத்து பாதிக்கப்பட்டவனுக்கு கொடுக்கப்படும். குற்றத்திற்கான தீர்வு கொடுக்கப்படுவதற்கு முன்பே இவனது நன்மைகள் (அனைத்தும்) அழிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குற்றங்களிலிருந்து (தீமைகள்) எடுக்கப்பட்டு இவனிடம் கொடுக்கப்படும். (அந்த குற்றங்களை சுமந்த நிலையில் எந்த நன்மைகளும் இல்லாத நிலையில் இவன்) நரகில் வீசப்படுவான் (இவனே அனைத்தையும் இழந்த ஏழை)என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்.)
மனித உரிமை விவகாரத்தில் கொடுக்கல் வாங்கல் முக்கிய இடத்தை பெறுகின்றது. மனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் நோக்கில் பலரிடம் கடன் வாங்குகிறான். இந்த கடனை முறையாக நிறைவேற்றுபவர்களும் இருக்கிறார்கள். மோசடி செய்பவர்களும் இருக்கிறார்கள். இது குறித்தும் மறுமையில் தீர்ப்பு வழங்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தவர்கள் நபி(ஸல்) அவர்களை தொழுவிக்கும்படி கூறி னார்கள். இவருக்கு ஏதேனும் கடன் உண்டா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை என கூறப்பட்டது. ஏதாவது விட்டுச் சென்றுள்ளாரா? என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கேட்டார்கள். இல்லை எனக் கூறப்படடது. நபி(ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அதன் பின் இன்னுமொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. தொழுகை நடத்தும்படி நபி(ஸல்) அவர்களை வேண்டினார்கள். இவருக்கு கடன் ஏதும் உண்டா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் எனக் கூறப்பட்டது. ஏதேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கேட்டார்கள். மூன்று தீனார்களை விட்டுச் சென்றுள்ளார் என பதிலளிக்கப்பட்டதும் அந்த ஜனாஸாவுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
அதன் பின் இன்னுமொரு ஜனாஸாவும் கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்களை தொழுகை நடத்தும்படி வேண்டினார்கள். இவர் ஏதேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை என பதிலளித்தார்கள். இவருக்கு ஏதேனும் கடன் உண்டா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் மூன்று தீனார்கள் கடன் உண்டு என பதிலளித்தார்கள். (கடனாளிக்கு தொழுகை நடத்தாமல்) உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
உடனே (அங்கிருந்த அபூ கதாதா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் அக்கடனுக்கு பொறுப்பேற்கிறேன். இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவுக்கு தொழுகை நடத்தினார்கள். (அறிவிப்பவர்: சலமதிப்னுல் அக்வஃ (ரழி), நூல்கள்: புகாரி, அஹ்மத், நஸயீ).
ஒரு மனிதருக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுக்காமல் அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் ஒருவர் மரணித்தபோது அவருடைய ஜனாஸா தொழுகையை நடத்த நபி(ஸல்) அவர்கள் மறுக்கிறார்கள்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மரணிப்பது அடுத்தவனின் உரிமைக்கு இழைக்கும் பெறும் அநீதி என்பதை இதன் மூலம் ஸஹாபாக்களுக்கு எச்சரிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களுக்கு மத்தியில் எழுந்து நின்று அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதும், அல்லாஹ்வை கொண்டு ஈமான் கொள்வதும் அமல்களில் மிகச் சிறந்ததாகும் எனக் கூறினார்கள்.
அப்பொழுது ஒரு மனிதர் எழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால் எனது பாவங்கள் மன்னிக்கப்படுமா? என்பதைக் கூறுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம்! நீர் பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்த்து முன்னோக்கிச் செல்பவராகவும் புறமுதுகு காட்டி ஓடாமலும் இருந்து அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள்.
பின்பு நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து நீர் என்ன கேட்டீர்? என்றார்கள். அந்த மனிதர் முன்பு போலவே கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! நீர் பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்த்து முன்னோக்கிச் செல்பவராகவும் புறமுதுகு காட்டி ஓடாமலும் இருந்து அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் ஆனால், (நீ வாங்கிய) கடனைத் தவிர (அந்தக் கடனை நீ திருப்பி செலுத்தாமல் மரணித்தால் உனது பாவங்கள் மன்னிக்கப்பட மாட்டாது). இதனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இப்போதுதான்) எனக்குக் கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரழி), (நூல்: முஸ்லிம்).
ஒருவர் தன்னுடைய உரிமைக்காக, சமுதாயத்தின் உரிமைக்காக, தான் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் உரிமைக்காக களத்தில் இறங்கி போராடி வீரமரணம் அடைந்தாலும் அடுத்தவனுடைய கடனை(உரிமையை) செலுத்தாமல் மரணித்தால் சுவனம் தடுக்கப்படுகிறது என்ற பாடத்தை கற்றுத்தருகிறார்கள்.
கடன் வாங்கினால் அதனை சரிவர நிறைவேற்றுபவர்கள் மக்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எந்த எண்ணமுமில்லாமல் கவலையுமில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்கள். இம்மையில் இக்கடனை திருப்பி செலுத்தாது விட்டால் மறுமையில் திருப்பிச் செலுத்த வேண்டிவருமே அந்த நாளில் எந்தப் பணமும் பொருளும் இருக்காதே அந்த நாள் (மறுமை) வரும் முன் இன்றே கடனை அடைத்துவிட வேண்டுமே என்ற பயமுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நபித்தோழர்களின் வரலாறு தரும் படிப்பினை
நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்கள் கண்டு செயற்பட்ட நபித் தோழர்கள் தங்களுடைய மரணத் தருவாயிலும் கடன் குறித்து நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த படிப்பினையாகும்.
கலீபா உமர் (ரலி) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் போது அபூலுஃலு என்பவன் உமர் (ரலி) அவர்களின் வயிற்றில் பிச்சுவாக் கத்தியால் பலமாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளான உமர் (ரலி) அவர்களின் நிலை மிகவும் மோசமாகியது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
- எம். எஸ். எம். இம்தியாஸ் ஸலஃபி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக