
சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார்.
புதுக்கோட்டை மீனவர் வீரபாண்டியன், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்துநாட்களுக்குள் அடுத்த கொலை!
வேதாரண்யம், புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன்(45), ஜெயக்குமார்(28), இவரது தம்பி செந்தில்(25) ஆகியோர் சனி காலையில் சேது சமுத்திர திட்டப்பணி நடந்த இடமருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை. அவரது கழுத்தை ஒரு கயிற்றில் கட்டி மறு முனையை பிடித்துக் கொண்டு படகைச் சுற்றி வந்த கடற்படையினர் அவர் செத்து விழுந்ததும் சென்றுவிட்டனர்.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்ற இரு மீனவர்களும் படகு திரும்பினர். பின்னர் ஜெயக்குமாரது உடலை எடுத்துக் கொண்டு அதிர்ச்சியுடனும், அவலத்துடனும் கரை திரும்பினர். கொல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு மூன்று ஆண்டுகள் முன்தான் திருமணம் நடந்து, இரு பெண்குழந்தைகள் உள்ளது. ஆத்திரம் தீராத மீனவர்களும், பிற மக்களும் ஜெயக்குமாரின் உடலை கிடத்தி சிலமணிநேரம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பிறகு வழக்கம் போல பண உதவி, ஆறுதல், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல் என்ற சடங்குகளெல்லாம் நடந்து விட்டன.நூற்றுக் கணக்கில் தமிழக மீனவர்கள் இப்படி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவது குறித்து அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இது மற்றுமொரு சம்பவமாகத்தான் கடந்து செல்லப்படுகிறது. இந்த உலகில் எதை வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம் என்றாலும், தமிழக மீனவர்கள் கேட்பார் கேள்வியின்றி சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதை மட்டும் எவராலும் நிறுத்த முடியாது என்று ஆகிவிட்டது.
கருணாநிதி வழக்கம் போல அதிர்ச்சியை தெரிவித்துவிட்டார். மற்றபடி அவர் எழுதும் கடிதம், தந்தி குறித்து கோபாலபுரத்து தெரு நாய்களே கிண்டல் செய்யும் நிலையில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இத்தகைய கெட்ட பெயர் வாங்கினால் வாக்குகள் சிதறுமே என்ற சுயநலத்தை வைத்துக்கூட இந்த படுகொலைகளை நிறுத்த இயலவில்லை என்றால் என்ன சொல்ல?
இப்போதெல்லாம் ஆளும் கட்சிகள் எந்த பிரச்சினை வந்தாலும் கவலைப்படுவதில்லை. திமிராக எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். விலை வாசி உயர்வா – மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலா – அதனால்தான் செல்பேசி கட்டணங்கள் குறைவு. டாஸ்மாக் விற்பனை உயர்வா – அதனால்தான் நலத்திட்டங்கள் நடக்கின்றன. பெட்ரோல் விலை உயர்வா – உலகம் முழுவதும் உயர்ந்திருக்கிறது… என்று எல்லாவற்றுக்கும் கூச்சநாச்சமின்றி பேட்டி கொடுக்கிறார்கள். அதன்படி மீனவர் கொலையைக்கூட அவர்கள் மாரடைப்பு வந்து செத்துவிட்டார்கள் என்றுகூடச் சொல்லலாம்.
நன்றி- வினவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக