மதுபான பார் உரிம அனுமதி வழங்குவது குறித்தான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றனர்' என, காங்கிரஸ் கட்சி எம்.பி., கே.சுதாகரன் குற்றம் சாட்டி உள்ளார். "நான் சொன்னது உண்மை தான். அதில் உறுதியாகவே உள்ளேன். ஆதாரங்கள் தேவைப்படும் போது அளிக்க தயாராக உள்ளேன். இதற்காக எந்த நடவடிக்கை வந்தாலும் அதை சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக உள்ளேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
கேரளா கண்ணூர் லோக் சபா தொகுதியில் இருந்து, காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வானவர் கே.சுதாகரன். இவர் நேற்று முன்தினம் கொட்டாரக்கராவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "பார் உரிமையாளர்களிடம் இருந்து, பார் உரிமம் அனுமதி வழங்குவது குறித்தான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றனர். அதற்கு நானே சாட்சி. நான் சொன்னவற்றில் மேலும் பலவற்றை சொல்ல வேண்டிய இடத்தில் தெரிவிப்பேன்.
அதற்கான ஆதாரங்கள் தேவைப்படும் போது அளிப்பேன். தேர்தல் வெற்றி பெற்றது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பெஞ்சு விசாரித்தது. அப்போது மதுபார் உரிமத்திற்கான அனுமதி வழங்க, லஞ்சம் வாங்குவதை நேரில் பார்க்க நேரிட்டது.
ஐகோர்ட் ரத்து செய்த 21 பார் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி வழங்குவதற்காகத் தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பார் உரிமையாளர்களிடம் இருந்து 36 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றனர்' என்றார். அவரது இப்பேச்சு மாநிலத்தில் மட்டுமல்லாது, டில்லியும் அதிர்ச்சி அலைகளை பரவவிட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் பேட்டியளித்த மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், "சுதாகரன் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து தீர்ப்பு பெறுவதற்கும் லஞ்சம் கொடுத்தாரா என்பதையும் அவர் விளக்க வேண்டும்.
மேலும், மதுபான பார் உரிமம் பெறுவதற்கு யார் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்தனர் என்பதையும் அவர் விளக்க வேண்டும். அவரிடம் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு லஞ்சம் பெற்ற நீதிபதிகள் யார், யார் என்பதையும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு, லோக்சபா உறுப்பினர் என்ற நிலையில் அவருக்கு உண்டு' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக