நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 54016 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
32 மாவட்டங்களில் அதிக சட்டப்பேரவை தொகுதிகளையும் வாக்குச்சாவடிகளையும் கொண்ட மாவட்டம் தலைநகர் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. 16 தொகுதிகளை கொண்ட சென்னையில் அதிகப்படியாக 3225 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அதற்கு அடுத்தப்படியாக அதிக வாக்குச்சாவடிகளைக் கொண்ட மாவட்டம் வேலூர் மாவட்டமாகும். இதில் உள்ள 13 தொகுதிகள் 2902 வாக்குச்சாவடிகளை கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக 11 தொகுதிகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2811 வாக்குச்சாவடிகள் உள்ளன.
மிகக் குறைவாக வாக்குச்சாவடிகளைக் கொண்ட மாவட்டம் கடைசியாக உருவான அரியலூர் மாவட்டம் ஆகும். அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு தொகுதிகளை கொண்ட இந்த மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகள் 519 மட்டுமே.
இரண்டாவது மிகக் குறைவான வாக்குச்சாவடிகளை கொண்ட மாவட்டம் பெரம்பலூர் மாவட்டமாகும். இரண்டு தொகுதிகளை கொண்ட இம்மாவட்டத்தில் 537 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக மூன்று சட்டப்பேரவை கொண்ட நீலகிரி மாவட்டம் 579 வாக்குச்சாவடிகள் கொண்டுள்ளது.
2000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளைக் கொண்ட மாவட்டங்களாக திருவள்ளூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருவெல்வேலி ஆகும். 1000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளைக் கொண்ட மாவட்டங்கள் 17 ஆகும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் பயமின்றி தங்கள் வாக்குறுதியை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் போலா நாத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக