சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் யார் பக்கம் எழும்பூர் : மொத்த வாக்காளர்கள் 1லட்சத்து 64 ஆயிரத்து 724. இதில், 57ஆயிரத்து 420 ஆண்களும், 54 ஆயிரத்து 709 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க., சார்பில் போட்டியிடும் பரிதி இளம்வழுதி ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்டவர். தொகுதிக்குள் வராதவர் என்றாலும், பெரியளவில் குற்றச்சாட்டு இல்லாதவர். அதனால், நம்பிக்கையுடன் உள்ளார்.
எதிர்த்து போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி, கட்சியில் செல்வாக்கு உள்ளவர் என்றாலும், தொகுதியில் அதிகளவு அறிமுகம் இல்லாதவர். குடிசைப் பகுதிகளில் பணம் வினியோகம் செய்திருப்பது தி.மு.க.,விற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம்: காங்கிரஸ் சார்பில், ராயபுரம் மனோ, அ.தி.மு.க., சார்பில் ஜெயக்குமார் உட்பட 13 பேர் போட்டியிட்டனர். 56 ஆயிரத்து 691 ஆண்களும், 55 ஆயிரத்து 844 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு, தேர்தலில் ஜெயக்குமார் தி.மு.க., வை 13 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மனோ, தொகுதியில் பிரபலமானவர் என்றாலும், தி.மு.க.,வினர் சரிவர தேர்தல் வேலை பார்க்கவில்லை. மீனவ சமுதாயத்தினர் ஓட்டு அ.தி.மு.க., பக்கம் சாய்வதால், ஜெயக்குமாருக்கு சாகதமாக உள்ளது.
துறைமுகம்: தி.மு.க., சார்பில் அல்டாப் உசேன், அ.தி.மு.க., சார்பில் பழ.கருப்பையா உட்பட 14 பேர் போட்டியிட்டனர். 53 ஆயிரத்து, 164 ஆண்கள், 44 ஆயிரத்து 64 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். கடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில், அன்பழகன் 490 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அ.திமு.க.,விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு இருப்பதால், முஸ்லிம் சமுதாயத்தினரின் ஓட்டுகள், பழ. கருப்பையாவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: தி.மு.க., சார்பில் மாவட்ட செயலர் அன்பழகன், அ.தி.மு.க., சார்பில் மனிதநேய கட்சி தமிமுன் அன்சாரி உட்பட 14 பேர் போட்டியிட்டனர். 66 ஆயிரத்து 304 ஆண்களும், 63 ஆயிரத்து 430 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க., சார்பில், வீடுவீடாக பணம் வினியோகம் செய்திருந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தினர் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால், தமிமுன் அன்சாரி, முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க., வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் விளக்கு: தி.மு.க., சார்பில் அசன் முகமது ஜின்னா, அ.தி.மு.க., சார்பில் வளர்மதி உட்பட 16 பேர் போட்டியிட்டனர். 68 ஆயிரத்து 826 ஆண்களும். 64 ஆயிரத்து 793 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்தனர். ஏற்கனவே, துணை முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி என்றாலும், சில வார்டுகள் நீக்கப்பட்டு மயிலாப்பூர் தொகுதியின் சில வார்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க.,விற்கு பாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.
தி.மு.க., சார்பில் வார்டுக்கு ரூபாய் மூன்று கோடி அளவிற்கு செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க., சார்பில் வார்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்பதால், அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை இழந்துள்ளனர்.
அண்ணா நகர்: காங்கிரஸ் சார்பில் அறிவழகன், அ.தி.மு.க., சார்பில் கோகுல இந்திரா உட்பட, 20 பேர் போட்டியிட்டனர். 76 ஆயிரத்து 941ஆண்கள், 74 ஆயிரத்து 380 பெண்கள் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். கடந்த தேர்தலில், ஆற்காடு வீராசாமி, ம.தி.மு.க., வை விட 12 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர். இந்த தேர்தலில் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர், காங்கிரஸ் சார்பில், போட்டியிடுவதால் தி.மு.க.,வினர் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை. படித்தவர்கள், அரசு அதிகாரிகள் நிறைந்த தொகுதி என்பதால், அ.தி.மு.க., நம்பிக்கையுடன் உள்ளது.
விருகம்பாக்கம்: தி.மு.க., சார்பில் தனசேகரன், தே.மு.தி.க., சார்பில் பார்த்தசாரதி, உட்பட 10 பேர் போட்டியிட்டனர். 74 ஆயிரத்து 215 ஆண்களும், 71 ஆயிரத்து 512 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக ஈடுபாட்டுடன் தன சேகரன் உதவி செய்துள்ளதால், நம்பிக்கையுடன் உள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீடு இருக்கும் தொகுதி என்பதால் அக்கட்சியினர் தீவிரமாக செயல்பட்டனர். வெற்றி யாருக்கு என்பது மதில் மேல் உள்ள பூனையாக உள்ளது.
சைதாப்பேட்டை: தி.மு.க., சார்பில் மகேஷ்குமார், அ.தி.மு.க., சார்பில் செந்தமிழன் உட்பட 19 பேர் போட்டியிட்டனர். 78 ஆயிரத்து, 38 ஆண்களும், 75 ஆயிரத்து, 967 பெண்களும், ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். வேட்பாளரை தேர்வு செய்ததில் கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற சைதாப்பேட்டை பகுதி தி.மு.க.,வினரிடையே பெரிய அளவில், எதிர்ப்பு இருந்தது. முழு ஈடுபாட்டுடன் தி.மு.க.,வினர் வேலை பார்க்கவில்லை. ஏற்கனவே செந்தமிழன் இந்த தொகுதியில் 6,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதால், தற்போது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக