அப்போது சேகர்பாபு கூறியதாவது: 1.50 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியிலும், 2 கோடி ரூபாய் அரசு நிதியும் பெற்று சின்ன ஸ்டான்லி மருத்துவமனையை, தினமும் ஆயிரம் பேர் வரை பயன்பெறும் வகையில் மேம்பாட்டுப்பணிகளை செய்துள்ளேன். மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டும், சிறு தொழில் நிறுவனங்கள் மின் தடையால் பாதிக்காத வகையில், எட்டு ஆண்டுகளாக போராடி 41 கோடி ரூபாயில் துணை மின் நிலையத்தை அமைத்துள்ளேன். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் மேம்பாலம் கட்டும் பணிகள் ஜூன் மாதத்தில் முடியும். பணி முடிந்ததும் கண்ணன் தெரு, கே.எச்.ரோடு சந்திப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். தொகுதியில் பட்டா கிடைக்காமல் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பட்டா பெற்று தருவேன். வெள்ளக்கால பாதிப்பைத் தடுக்க தொகுதியில் 20 கோடி ரூபாயில், திட்டம் துவக்கப்பட்டு, 15 கோடி ரூபாயில் பணிகள் நடந்துள்ளன. மீதமுள்ள ஐந்து கோடி ரூபாய் பணிகளையும் செய்து தருவேன். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
கொளத்தூரில் மும்முனை பிரசாரம்: வி.ஐ.பி., தொகுதியான கொளத்தூரில், அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியும், தி.மு.க., வேட்பாளர் ஸ்டாலினும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஆம்ஸ்ட்ராங்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் 51, 54 வது வார்டுகளில் பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி துர்காவதி ஸ்டாலின், புலவர் இந்திர குமாரி மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேங்கடபதி உட்பட பலர் வீடுகள், கடைகள், பெட்ரோல் "பங்க்' என மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று ஓட்டு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமி கூட்டணிக் கட்சியினருடன் தினமும் அதிகாலை முதல் மாலை வரை பூங்கா, கோவில், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன், நடிகர் சிங்கமுத்து ஆகியோர் பிரசாரம் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவரும், வேட்பாளருமான ஆம்ஸ்ட்ராங் உள்ளூர் மக்கள் பிரதிநிதி என்ற செல்வாக்குடன், வெள்ளைச் சீருடையில் ராணுவ கட்டுப்பாடுடன் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிக்கிறார்.
ஆலந்தூர்: ஆதம்பாக்கம் வேம்புலியம்மன் கோவிலில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் காயத்ரிதேவி சாமி கும்பிட்டுவிட்டு, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், பல்லாவரம் கன்டோன்மென்ட்டில் தி.மு.க., கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தே.மு.தி.க., வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். ஆதம்பாக்கம் கருணீகர் தெரு, பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாலம், மேடவாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஓட்டு சேகரித்தார். பா.ஜ., வேட்பாளர் டாக்டர் சத்தியநாராயணன், ஆலந்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தாம்பரம்: தாம்பரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஓட்டு சேகரித்தார். அ.தி.மு.க., வேட்பாளர் சின்னையா, செம்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். பா.ஜ., வேட்பாளர் வேதசுப்ரமணியம் பெருங்களத்தூர், பீர்க்கண்காரணை பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
"ரவுடியிசத்தை ஒழிப்பேன்': சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த தமிமூன் அன்சாரி போட்டியிடுகிறார். பிரசாரத்திற்கு இடையில் தமிமூன் அன்சாரி பேசியதாவது: நான் வெற்றி பெற்றால், தொகுதியில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க ஆங்காங்கே பாலங்களை கட்டுவேன். சாக்கடை அடைப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். ராணுவம் போல் செயல்பட்டு, சட்டத்தின் வழியில், தொகுதியில் நிலவும் ரவுடியிசத்தை இரும்புகரம் கொண்டு ஒழிப்பேன். கட்ட பஞ்சாயத்தை ஒழிப்பேன். வணிகர்களிடம் மாமூல் வசூலிப்பதை தடுத்து நிறுத்துவேன். நள்ளிரவு 12 மணிக்கு கூட பெண்களும், பொதுமக்களும் அச்சமின்றி சாலைகளில் நடமாடும் வகையில் செயல்படுவேன். என்னை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் சந்தித்து தங்கள் குறைகளை கூறலாம். இவ்வாறு பேசி பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்து வருகிறார்.
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குப்பன், நகராட்சித் தலைவர் ஜெயராமனுடன் திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ள சாலைகளை எல்லாம் தரமான சாலைகளாக சீரைமத்துத் தருவேன், புறக்கணிக்கப்பட்ட மேற்கு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று கூறி ஓட்டு சேகரித்தார்.
பல்லாவரம்: பல்லாவரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தன்சிங், குரோம்பேட்டை மும்மூர்த்தி நகர், நியூ காலனி, சாஸ்திரி காலனி, கோதண்டராமன் நகர், லஷ்மண் நகர், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். பல்லாவரத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்தவர்களிடமும், சந்தைக்கு வந்தவர்களிடமும் அவர் ஆதரவு திரட்டினார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜப்பா பம்மல், பொழிச்சலூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார். தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் அன்பரசன் நேற்று துணை முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தங்கபாலு ஓட்டு சேகரிப்பு: மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில், தொழுகை நடத்தி விட்டு வெளியே வந்த முஸ்லிம்களிடம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தொப்பி அணிந்தபடியே கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். மந்தைவெளி, பெருமாள் கோவில் தெரு, நாராயண செட்டி சந்து, ராஜகிராமணி தோட்டம், ஆர்.ஏ., புரம் உள்ளிட்ட பல பகுதிகளில், வீடு வீடாகச் சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஓட்டு சேகரித்தார். கச்சேரி சாலையில் உள்ள, ஜும்மா மசூதியில் தொழுகை நடத்திவிட்டு, வெளியே முஸ்லிம்களிடம் தங்கபாலு தொப்பி அணிந்த வண்ணம், கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
பிரசாரத்தில் தங்கபாலு பேசியதாவது: மந்தைவெளியில், 10 ஆண்டிற்கும் மேலாக ரேஷன் கடை இல்லை என்று கூறப்பட்டு வந்தது. அந்த குறை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு இலவச காஸ், கலர் "டிவி' உள்ளிட்ட பல பொருட்கள் தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 35 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு தங்கபாலு கூறினார்.
source: dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக