நேற்று மாலையே அந்தந்த மண்டலங்களில் இருந்து ஓட்டு பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்பட்டன. மேலும் தேர்தல் அலுவலர்களும், பாதுகாப்புக்கான போலீசாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகளை செய்ய துவங்கி விட்டனர். வாக்குச்சாவடிக்கு தேவையான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், அழியாத மை, ஓட்டுபோடுவதற்கான அனுமதி சீட்டு, வேட்பாளர் மற்றும் அவரது சின்னம் வரையப்பட்ட நோட்டீஸ், மெழுகுவர்த்தி உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் நிரப்பப்பட்ட பெட்டி ஆகியவையும் நேற்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் அறைககளின் சீலை எடுத்து பூட்டை உடைத்து உள்ளே இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன. அவை துணை ராணுவ பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 2 ஆயிரத்து 203 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை 214 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவிற்காக வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் வாக்குப்பதிவு நாளான இன்று அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்ப விட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடைகளுக்கு கூட விடுமுறை விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக