
அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான்.
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.
அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி – இதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள்.
அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!
இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன.
முதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்’ என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம்.
மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும் ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின் பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம்.
இந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும் சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது.
பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.
எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.
இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை – ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில் கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக