மேலூர் தாசில்தார் மீது மு.க. அழகிரியின் முன்னிலையில் தி.மு.க.வினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து மதுரை மற்றும் மேலூரில் வருவாய்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வருகின்ற 13-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மத்திய மந்திரியும் தென்மாவட்ட தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரி, தென்மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக தனது ஆதரவாளர்களுடன் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து மிரட்டி அவர்களுக்கு பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி தி.மு.க. வுக்கு ஓட்டுப்போட சொல்லி நிர்ப்பந்தம் செய்து வருகிறார். பல கிராமங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தி.மு.க.வினர் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற மு.க. அழகிரி தீவிர முஸ்தீப் செய்து வருகிறார். ஆனால் அழகிரி மற்றும் தி.மு.க.வினரின் தேர்தல் விதி மீறல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்காணித்து அதனை தடுக்க பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத்தூவி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு மு.க. அழகிரி பகிரத முயற்சி செய்து வருகிறார். இதனால் அவரை கட்டுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் மு.க. அழகிரிக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை நேற்று முன்தினம் திடீரென வாபஸ் பெற்றது. இதனால் தி.மு.க.வினர் மத்தியில் ஒரு திடுக் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ராஜமாணிக்கத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் நேற்று மத்திய மந்திரி மு.க. அழகிரி மேலூர் தொகுதியில் உள்ள 50 கிராமங்களை உள்ளடக்கிய வெள்ளலூர் நாடு பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்குள்ள ஒரு கிராமமான அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடையார் கோயிலுக்கு அங்குள்ள அம்பலக்காரர்களில் வரவேற்புக்கு இணங்க மு.க. அழகிரி நேற்று சென்றார். அவருடன் மதுரை மாநகராட்சி துணைமேயர் பி.எம். மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெகுபதி, நகர செயலாளர் இப்ராகீம் சேட், ஒத்தப்பட்டி தி.மு.க. பொறுப்பாளர் திருஞானம் உள்ளிட்ட பலரும் சென்றனர். கோயில் பூஜாரி சாமிக்கு தீபாராதனை காட்டி மு.க. அழகிரிக்கு விபூதி வழங்கினார். விபூதியை எடுத்துக்கொண்ட மு.க. அழகிரி தீபாராதனை தட்டில் ரூ. 100 ஐ எடுத்துப்போட்டார். இதனை கண்காணிக்க சென்ற மேலூர் தாசில்தார் காளிமுத்து அவருடன் சென்ற வீடியோர் கிராபர் அந்த சம்பவத்தை வீடியோ படம் எடுத்தார். இதனை கவனித்துக்கொண்டியிருந்த மு.க. அழகிரி, வீடியோ படம் எடுக்கக்கூடாது. வெளியே செல்லுமாறு முகத்தை சுண்டி கண்டித்துப்பேசினார். வீடியோ கிராபரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். உடனே மு.க. அழகிரியின் அருகில் இருந்த தி.மு.க.வினர் வீடியோ கேமிராவை பிடுங்க முயற்சித்தனர். உடனே வீடியோ கிராபர் கேமிராவை அருகே இருந்த தாசில்தார் காளிமுத்துவிடம் ஒப்படைத்தார். இதனை கண்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தாசில்தார் மீது பாய்ந்து கேமிராவை பிடுங்க முயற்சித்தனர். அப்போது தாசில்தாருக்கும் தி.மு.க.வினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதனிடையே துணைமேயர் பி.எம. மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் உள்ளிட்ட அழகிரியின் ஆதரவாளர்கள் தாசில்தார் காளிமுத்துவை சரமாரியாக தாக்கினர். இதில் தாசில்தார் காளிமுத்து ஊமைக்காயம் அடைந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணைக்காணிப்பாளர் மணிவண்ணன்,போலீசாருடன் புகுந்து தாசில்தார் காளிமுத்துவை தி.மு.க. வினரின் பிடியில் இருந்து காப்பாற்றி கோயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து அனுப்பி வைத்தார்.
தாசில்தார் காளிமுத்து, மு.க. அழகிரி ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. இந்த சம்பவத்தை கண்டித்து தாசில்தார் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மேலூர் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் வேலையை புறக்கணித்து அலுவலகம் முன்பு ஜெயபாண்டி, சிவதாணு, காட்டுவா, மலையாண்டி, ரேவதி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டியிருந்த வருவாய் துறை அலுவலர்களும் ஊழியர்களும் கொதித்து எழுந்தனர். பணியை புறக்கணித்துவிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஞான குணாளன் தலைமையில் தாசில்தார் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடிவதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் தேர்தல் பணி புறக்கணிப்பு போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று ஞானகுணாளன் அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் சகாயத்திடம் மனுவும் கொடுக்கப்பட்டது.
இதனிடையே தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தாசில்தார் காளிமுத்து மேலூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் பி.எம். மன்னன், ரெகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் மற்றும் அடையாளம் தெரியாத தி.மு.க.வினர்களை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக