பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.
பராக் ஒபாமாவின் வார்த்தைகள் ஒரு அம்சத்தில் உண்மையானது தான் – அதாவது அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொல்பவன் ஒரு பயங்கரமான தீவிரவாதியாகத் தான் இருக்க முடியும். அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஒபாமாவின் ஆசையைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது – அது நியாயமானது தான். எமது ஆசையும் கூட அதுவே தான். நாம் எமது வாசகர்களையும் பொதுமக்களையும் ஒபாமாவின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கோருகிறோம். ஆனால், ஒசாமா பின்லேடன் ஒழிந்த பின் இப்போது உலகிலேயே பயங்கரமான தீவிரவாதி யாராக இருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது நியாயமானது தான். எனவே அப்படியொரு தீவிரவாதியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது கடமையாக கருதுகிறோம்.
இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான். அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் தம் பெற்றோர் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்கள் தமது பிள்ளைகள் முன்பே மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இந்த பயங்கரவாதி வீசிய குண்டுகளில் சிதைந்து போயுள்ளன. கருவிலிருக்கும் சிசு வரையில் ஊடுருவும் வீரியம் மிக்க அந்த குண்டுகளினால் பிறக்கும் குழந்தைகள் உருவமற்ற வெறும் சதைக்கோளங்களாகப் பிறந்துள்ளன.
ஒசாமா பின்லேடனாவது எந்த நீதிமன்றத்தாலும் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவனில்லை – ஆனால், நாங்கள் அடையாளம் காட்டுவதோ சர்வதேச நீதிமன்றத்தாலேயே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதியை. இன்னமும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் அந்தத் தீவிரவாதி வேறு யாரும் இல்லை – அது அமெரிக்கா தான். உலகெங்கும் ஒரு ஆக்டோபஸின் கரங்களைப் போல் விரியும் அமெரிக்காவின் பயங்கரவாதக் கொலைக் கரங்கள் விளைவித்த சர்வநாசங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை இங்கே வழங்குகிறோம். முதலில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து துவங்குவோம்.
அமெரிக்க பயங்கரவாதம் – தென் அமெரிக்க சாட்சியங்கள்!
வட அமெரிக்க கண்டத்தையும் தென்னமெரிக்க கண்டத்தையும் இணைக்கும் மெல்லிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய நாடு நிகரகுவா. 1936-ல் தொடங்கி சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தது சோமோசா சார்வாதிகார கும்பல். இன்றைக்கு உலகமக்களுக்கு ஜனநாயக விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இதே யோக்கிய அமெரிக்கா தான் அன்று மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சோமோசா கும்பலுக்கு உற்ற பங்காளி.
காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுகள் ஒரு பௌதீக வடிவமாக ஸான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் வடிவில் உருக்கொண்டு எழுந்து சூறாவளியாய்ச் சுழன்றடித்ததில் சோமோசா குடும்பத்தின் கடைசி வாரிசும் அப்போது அதிகாரத்திலிருந்த கொடும் சர்வாதிகாரியுமான அனடேஸியோ சோமோசா டெபாயேல் 1979-ம் ஆண்டு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். மக்களின் விடுதலை உணர்வுகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. 77-ம் ஆண்டே இதை முன்னறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். ஆனாலும் சுழன்றடித்த மக்களின் கோபக் கனலில் சோமோசா சர்வாதார ஆட்சி கவிழ்ந்து சான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோமோசா கும்பலுக்கு விசுவாசமான கூலிப்படையினரைப் பொறுக்கியெடுத்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, அவர்களுக்கு கான்ட்ராஸ் என்று பெயரிட்டு பயங்கரவாத நாசவேலைகள் செய்வதற்கு பயிற்றுவித்தனர். இதற்காகவே “ஸ்கூல் ஆப் அமெரிக்கானாஸ்” என்கிற பயங்கரவாத பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளது அமெரிக்கா. 1946-ல் துவங்கப்பட்ட இந்த பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் வைத்து தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒசாமாவுக்கே அப்பன்மார்களையெல்லாம் அமெரிக்கா விரிவாகப் பாடம் நடத்திப் பயிற்றுவித்து உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
சுமார் 60,000 பங்கரவாதிகளை உருவாக்கிய இந்தப் பள்ளியை உள்நாட்டில் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் டிசம்பர் 2000-ல் இழுத்து மூடிய அமெரிக்கா ஒரே மாதத்தில் – 17 ஜனவரி 2001-ல் – மேற்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பயிற்று மையம் (Western Hemisphere institute for security cooperation) என்கிற பெயரில் மீண்டும் திறந்துள்ளது. நிகரகுவா மட்டுமின்றி, எல்சால்வடாரில் இயங்கிய கொலைப்படை, பனாமாவின் கொடூர சர்வாதிகாரி மானுவேல் நொரியேகா, கொலம்பியாவின் மாஃபியா கும்பல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளையும் பயங்கரவாத கும்பலையும் பெற்றெடுத்துள்ளது இந்தப் பள்ளி.
அமெரிக்க செனேட்டரான ஜோஸப் கென்னடியின் கூற்றுப்படி, சுமார் பதினோரு இலத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரிகள் இந்தப் பள்ளியிலிருந்து தான் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். மேலும் அவர், உலகிலேயே அதிகளவிலான கொடூர சர்வாதிகாரிகளைத் தோற்றுவித்த ஸ்தாபனம் இதுவாகத் தான் இருக்கும் என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட்டுகளையும் புரட்சியாளர்களையும் எப்படித் தேடித் தேடிக் கொலை செய்ய வேண்டும், மாட்டிக் கொண்ட அப்பாவிகளை எப்படிச் சித்திரவதை செய்ய வேண்டும், கைது செய்த அரசியல் கைதிகளை எப்படித் துன்புறுத்தி விசாரிக்க வேண்டும், ஒரு சிவில் சமூகத்தில் நாசவேலைகளைச் செய்வது எப்படி என்பதெற்கெல்லாம் விரிவாக கோனார் நோட்ஸ் போட்டு பாடம் நடத்தியுள்ளார்கள். பொறுமையும் மனதைரியமும் இருந்தால் அவற்றில் ஒன்றை நீங்களும் வாசித்துப் பார்க்கலாம். அமெரிக்க சி.ஐ.ஏவின் இது போன்ற பயங்கரவாதக் கையேடுகள் இணையத்தில் நிறையக் கிடைக்கிறது.
பயிற்றுவிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்ட அமெரிக்காவின் இந்த ‘மாணவப்’ படை அப்பாவி மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயங்கரங்கள் சொல்லில் வடிக்க முடியாதளவுக்கு ரத்தக் கவுச்சி வீசும் சொல்லொணாத் துயரங்கள். இது பற்றி பதிவு செய்துள்ள நோம் சோம்ஸ்கி
“நிகரகுவாவில் அமெரிக்க அரசால் இயக்கப்பட்ட காண்ட்ரா கொலைப்படையாகட்டும், கவுதமாலா, எல்சால்வடாரில் செயல்பட்ட நமது பினாமி பயங்கரவாதிகளாட்டும், அவர்கள் சாதாரண முறையில் கொலை செய்வதில்லை… குழந்தைகளைப் பாறையில் மோதிக் கொல்வது, பெண்களின் மார்புகளை அறுத்துத் தலைகீழாகத் தொங்கவிட்டு ரத்தம் வெளியேறிச் சாகச் செய்வது, தலையைச் சீவிவிட்டு முண்டத்தை மட்டும் கழுமரத்தில் சொருகி வைப்பது என அனைத்துமே கொடூரமான வக்கிரமான முறைகள்”
பாதிரியாரான சாண்டியாகோ சொல்வது நமது முதுகெலும்பைச் சில்லிட வைக்கிறது -
“சதைகள் பிய்ந்து எலும்பு தெரியும் வரை குழந்தைகளை முள் கம்பிகளின் மேல் புரட்டி இழுத்து அந்தக் காட்சிகளைக் காணுமாறு பெற்றோர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்” இந்தக் கொடூரங்களைச் செய்ய பக்குவப்படுத்தும் பயிற்சி முறைகளை அமெரிக்காவே முன்னின்று கற்றுக் கொடுத்துள்ளது. எல்சால்வடாரின் கொலைப்படையில் இருந்து மன உளைச்சல் தாளாமல் தப்பியோடி வந்த ஒரு அகதி இதை 1990-ம் ஆண்டு அமெரிக்க நீதி மன்றத்திலேயே சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார்.
“சேரிகளுக்குள் புகுந்து 13, 14 வயது சிறுவர்களை போலீசு அள்ளிக் கொண்டு போகும். அவர்களுக்குப் பயிற்சி முகாமில் கொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவைகளை ஒரு மதச் சடங்கைப் போலப் பயிற்றுவிப்பார்கள். ‘மாணவர்கள்’ நாய்களையும் பருந்துகளையும் கழுத்தை முறித்து, பற்களால் தொண்டையைக் கடித்தே கொலை செய்யப் பழக வேண்டும். வெறும் மிருகங்களை வைத்து மட்டும் செய்முறை பயிற்சி அளிக்கப்படவில்லை. தமது ‘மாணவர்களின்’ திறன் வெறும் மிருகங்கள் பறவைகள் எனும் அளவில் மட்டும் சுருங்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறது.
பதிமூன்று ஆண்டுகளாக சி.ஐ.ஏ அதிகாரியாகப் பணியாற்றிய ஜான் ஸ்டாக்வெல் இது போன்ற செய்முறைப் பயிற்சிகளைப் பற்றி அளித்த பேட்டியொன்றில் மாணவர்களைத் தயாரிக்கும் முறைகளை விவரமாக பதிவு செய்துள்ளார். “சித்திரவதை முறைகளைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால், மாணவர்கள் தம் சொந்தக் கைகளால் அதைச் செய்து பழக வேண்டுமே. எனவே தெரிவுலிருக்கும் அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரை அள்ளிக் கொண்டு வருவோம். அவர்கள் தான் எங்கள் சோதனைச் சாலை எலிகள்”
“மெல்லிய உறுதியான மின் கம்பியை பற்களுக்கிடையில் நுழைத்து விட்டு இன்னொரு முனையை ஆண் குறியில் முடுக்கி விட்டு மின்சாரத்தைச் செலுத்துவார்கள். துன்பம் தாங்காமல் அவர்கள் கதறுவார்கள். அரசியல் கைதிகளாயிருந்தால் “நிறுத்து. உண்மையைச் சொல்லிவிடுகிறேன்” என்று அலறக் கூடும். இந்த அனாதைகளுக்கோ தம்மை ஏன் சித்திரவதை செய்கிறார்கள் என்பதே தெரியாது. எனவே கதறுவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய இயலாது”
“வலி தாங்காமல் துடித்து மயங்கி விழுந்தவுடன் டாக்டர் வருவார். இந்த ‘சோதனைச் சாலை எலிகளுக்கு’ வைட்டமின் ஊசி போட்டு ஓய்வெடுக்க வைப்பார். சிறிது நேரத்திற்குப் பிறகு அடுத்த வகுப்புக்கு எலிகள் தயாராக வேண்டும்”
“ஒரு கட்டத்தில் அவர்கள் செத்துப் போவார்கள். அவர்களது பிணமும் பயன்படும். பிணத்தை நகரத்தின் நடுவீதியில் வீசியெறிவோம். பிணத்தைப் பார்க்கும் மக்கள் ‘அரசாங்கம் – போலீசு’ என்று நினைத்தாலே குலை நடுங்குவார்கள்”
தற்போது அமெரிக்காவின் ஆசி பெற்ற ‘ஜனநாயகப்’ போராளிகள் லிபியாவில் இப்படித்தான் சண்டை போடுகின்றனர். உயிரோடு லிபிய இராணுவச் சிப்பாயை தலைகீழாக் கட்டி தொங்கவிட்டு நெஞ்சைப் பிளந்து இதயத்தை அப்படியே பிடுங்குகிறார்கள். யூ டியூபில் இந்தக் காட்சியைப் பார்ப்போர் உடைந்து போவது நிச்சயம்.
கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் எதற்கெடுத்தாலும் அமெரிகாவைக் குறை சொல்கிறீர்களே என்று சலித்துக் கொள்ளும் சில அறிவாளிகள் இதயத்தில் ஈரமும் கண்களில் கொஞ்சமாவது கண்ணீரும் மிச்சமிருந்தால் அந்தத் தென்னமெரிக்க அப்பாவிகளுக்காக அது வடியட்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, தனது சொந்த மக்களைத் தவிக்க விட்டு, அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் இது போன்ற படுபயங்கரவாதச் செயல்களுக்கு நிதி ஒதுக்குகிறது அமெரிக்கா.
முழு உலகிலும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ரத்தச் சுவடுகள்
தென்னமெரிக்க கண்டம் மட்டுமல்ல, கொரியப் போர்களில் வீசப்பட்ட நாபாம் குண்டுகளும், வியட்நாமில் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளும் கருக்கியெறிந்த கனவுகளும் மக்களின் வாழ்க்கையும் எண்ணிலடங்காதவை. தென்னமெரிக்க அனாதைகள் மட்டுமா அமெரிக்காவின் பயங்கரவாதப் பள்ளிகளுக்குச் சோதணைச் சாலை எலிகள்? கொரியாவின் தேசிய விடுதலைக்காக ஜப்பானை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுப் போராளிகள் மேல் நாபாம் குண்டுகளையும் பல்வேறு உயிரி ஆயுதங்களையும் வீசி அமெரிக்கா நடத்திய சோதனையின் விளைவு மட்டுமே ஒரு லட்சம் உயிர்கள் பலி. இன்னும் வியட்நாம், யுகோஸ்லோவியா, ஈராக், ஆப்கான், லிபியா என்று அதன் பாவ மூட்டைகளை ஒன்றாகக் குவித்தால் அது இந்த பூமிப் பந்தை விட அளவில் பெரிதாய் இருக்கும்.
ஈராக்கின் மேல் இராணுவத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும் என்றால் அதற்கும் முன்பிருந்தே பொருளாதாரத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அத்தியாவசிய மருந்துகளைத் தடுத்ததன் மூலம் மட்டுமே ஐந்து லட்சம் அப்பாவிக் குழந்தைகளை ஈராக்கியர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். பாலைவன தேசமான ஈராக்கில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களை இறக்குமதி செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் காலரா போன்ற நோய்களுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை தனி கணக்கு.
சிதறி ஓடுபவர்களை துரத்தித் துரத்திக் கொல்ல கொத்து குண்டுகள் என்றால், நிலத்தினடியில் பதுங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்ல, நிலத்தையே இருபதடிகள் வரை ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ஏவுகணைகள் – கருவிலிருக்கும் குழந்தைகளைத் தாக்கியழிக்க அணுக் கழிவு ஏவுகணைகள் என்று ரகரகமாக ஈராக்கிலும் ஆப்கானிலும் குண்டுகளை பொழிந்துள்ளது அமெரிக்கா. ஈராக்கியர்களின் தோல்வியின் ரணம் என்பது சிலவருடங்களில் ஆறிப் போவதல்ல – அது அணு ஆயுத பாதிப்பு என்கிற வகையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்ந்து வரப்போகும் சாபம்.
ஒபாமா அறிவித்துள்ளதைப் போல் பயங்கரவதாதத்திற்கு எதிரான போர் தொடரத் தான் வேண்டும் ஆனால் யார் மிக மோசமான பயங்கரவாதி? இன்றைய உலகின் மிக மோசமான பயகரவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்களின் மேல் ஏவி விட்டுள்ள பயங்கரவாதம் தான் என்பதற்கு நம்மிடம் ஏராளமான சான்றுகளும் அதனால் உலக மக்கள் அனுபவித்து வரும் பாடுகளும் எதார்த்தத்தில் நம் கண் முன்னேயே உள்ளன. அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு எங்கோ உள்ள தென்னமெரிக்க கண்டத்து மக்களும் ஆப்கானிய ஈராக்கிய மக்களும் மட்டும் தானென்றும் இங்கே நாமெல்லாம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் வாழ்வதாக கருதிக் கொள்ளும் நடுத்தரவர்கத்தினரின் சமையலறை வரையில் அமெரிக்க ஆக்டோபஸின் கரங்கள் நீண்டிருப்பதை உணரவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொல்வது ஜார்ஜ் புஷ், ஒபாமா போன்ற ஒருசிலரோடு மட்டும் முடிந்து விடுவதல்ல – இவர்கள் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவர்களாக வீற்றிருக்கும் தேசங்கடந்த தொழிற்கழக முதலாளிகளின் உற்சவ மூர்த்திகள் மட்டும் தான். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும், உள்நாட்டுத் தொழில்களையும் தாக்கியழித்துக் கபளீகரம் செய்யும் தனியார்மய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளாக அது தேச எல்லைகளையெல்லாம் கடந்து நீண்டு கிடக்கிறது. பி.டி கத்தரிக்காயாக உங்கள் சமையலறையில் ஊடுருவியிருக்கும் அதே நேரத்தில் நியாம்கிரி மலையிலும் இன்னும் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் தொழில் ‘வளர்ச்சியாக’ சிறகு விரித்துக் கிடக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரப் போகிறது – நீங்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகிறீர்கள்?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக