ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’ (2:183).
நோன்பு இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் ஒன்றாகும். இது இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி முன்னுள்ள சமூகங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் பிரசாரப் பணியைப் புரிவதற்கு முன்னரே, ஜாஹிலிய்யாக் கால மக்கள் நோன்பை அறிந்திருந்தனர். முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்றும் வந்தனர்.‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’ என்று இந்த வசனம் கூறுகின்றது.
இங்கே ‘உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று’ என்பது, இதே அமைப்பில் கடமையானதைக் குறிப்பதாக இருக்காது. அவர்களுக்கும் கடமையாக இருந்தது; உங்களுக்கும் கடமை என்ற கருத்தைத் தான் தரும். ஏனெனில், இதற்கு முன்னர் ‘மௌன விரதம்’ மேற்கொள்ளும் பழக்கமும் முன்னைய சமூகங்களிடம் இருந்தது என்பதை,
‘ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலினால் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேசமாட்டேன்’ என்று கூறும்.
(19:26) என்ற வசனம் உணர்த்துகின்றது.
இவ்வாறே, நோன்பு நோற்பவர்கள் ‘ஸஹர்’ உணவு உண்பது அவசியமாகும். ஆனால், அவர்களுக்கு ‘ஸஹர்’ விதிக்கப் பட்டிருக்கவில்லை. இதை ‘நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள்; ஏனெனில், ஸஹர் உணவு உண்பது எமக்கும் யூதர்களுக்கு மிடையில் உள்ள வேறுபாடாகும்’ என ஹதீஸ் கூறுகின்றது.
எனவே, எமக்குக் கடமையாக்கப்பட்ட அதே அமைப்பில் அவர்களுக்குக் கடமையாக் கப்பட்டிருக்கவில்லை என்பது புரிகிறது! எனவே, கடமை என்ற அம்சத்தில் அவர்கள் போன்றே உங்கள் மீதும் கடமை. ஆனால், அதை நிறை வேற்றும் ‘ஷரீஅத்’ வழிமுறை மாறுபட்டதாக இருக்கலாம் என்பதை இவ்வசனம் உணர்த்து கின்றது.
நோன்பு விதியாக்கப்பட்டதன் அடிப் படை இலக்குப் பற்றி இவ்வசனம் குறிப்பிடும் போது, ‘நீங்கள் பயபக்திடையுவர்களாகலாம்’ எனக் குறிப்பிடுகின்றது.
நோன்பு நோற்பவர்களிடம் ‘தக்வா’ என்ற இறையச்ச உணர்வு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும் என இவ்வசனம் கூறுகின்றது!
‘தக்வா’ என்றால் அல்லாஹ்வின் ஏவல்களை முடிந்தவரை எடுத்து நடத்தல், அவன் விலக்கியவற்றைவிட்டும் முற்றுமுழுதாக விலகிக்கொள்ளுதல் என்ற பக்குவத்தைக் குறிக்கும். இந்தப் பக்குவத்திற்கும் நோன்புக்கு மிடையில் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நோன்பு என்பது உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றை ‘சுபஹ்’ முதல் ‘மஃரிப்’ வரை அல்லாஹ்வுக்காக தவிர்ந்திருப்பதைக் குறிக்கும். இந்த செயல்பாடுகள் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவைகளே! அதேவேளை, மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானவையும் கூட! அல்லாஹ்வுக்காக குறிப்பிட்ட நேரம் இவற்றைத் தவிர்த்துக்கொள்பவன், அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகிக்கொள் ளும் பக்குவத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமல்லவா?
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவு செய்வதற்காக சுமார் 14 மணி நேரங்கள் உண்ணாமல், பருகாமல் சிரமத்தைத் தாங்கிக் கொள்கின்றான்! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை இதன் மூலம் பெறலாமல்லவா?
நோன்பு நோற்பவர் தனித்திருந்தாலும், பகிரங்கமாக இருந்தாலும், பசியும் தாகமும் வாட்டினாலும் இரகசியமாகக் கூட எதையும் உண்பதில்லை. ‘அல்லாஹ் பார்த்துக்கொண்டி ருக்கின்றான்’ என்ற உணர்வுதான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். இந்த உணர்வு அதிகரித்தால் அவன் தவறுகளிலிருந்து விலகி வாழும் பக்குவத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமல்லவா?
நோன்பாளி ‘ஸஹர்’ நேரத்தில் எழுந்து உண்கிறான். இது அவனது பழக்கவழக்கங்க ளுக்கும், உலக நடைமுறைக்கும் முரண்பட்ட நடவடிக்கையாகும். அதே வேளை, மக்கள் அனைவரும் உண்ணும் நேரத்தில் உணவைத் தவிர்த்து நடக்கின்றான். இது வித்தியாசமான நடைமுறையாகும். இப்படி பயிற்சி பெறும் ஒரு நோன்பாளி அல்லாஹ்வின் கட்டளை தனக்குச் சிரமமாக இருந்தாலும், தனது பழக்கவழக்கங்கள், நடைமுறைகளுக்கு முரண்பட்டதாக இருந் தாலும் நான் அதைச் செய்வேன்! அதற்காக சிரமமெடுப்பேன்! என்ற பக்குவத்தை வழங்குமல்லவா?
இது தான் நோன்பின் இலக்காகும். நோன்பாளி உண்ணல், பருகல், உடல் உறவில் ஈடுபடல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்வதுதான் அடிப்படைக் கடமையாகும். ஆனால், இவற்றைத் தவிர்ப்பதுடன் கெட்ட நடத்தைகள், தேவையற்ற செயற்பாடுகள் என்பவற்றையும் அவன் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உண்மையான நோன்பு என்பதை பல்வேறு ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
‘எவர் பொய் பேசுவதையும், அதனடிப்படை யில் செயற்படுவதையும் விட்டுவிடவில் லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ் வுக்கு எந்தத் தேவையுமில்லை’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
இந்நபிமொழி வெறுமனே பசித்திருப் பதும், தாகித்திருப்பதும் நோன்பின் இலக்கு அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.
எனவே, பக்குவமற்ற விதத்தில் நோன்பு நோற்பவர்கள் வெறுமனே பசித்திருப்பவர்களே என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
‘நோன்பாளி பிற மனிதர்களுடன் பண்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால், அவர் வீண் பேச்சுக்களையும், கெட்ட நடத்தைகளையும் தவிர்ந்துகொள்ளட்டும். எவரேனும் அவருடன் சண்டைசெய்ய முற்பட்டால், ‘நான் நோன்பாளி’ எனக்கூறி, (பொறுமை காத்து)க்கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே, எம்மிடம் பயபக்தியை ஏற்படுத் தும் வண்ணம் நோன்பை நோற்று வீணான நடத்தைகள், சர்ச்சைகளைத் தவிர்த்து உரிய முறையில் கடைபிடித்து உயரிய இறையச்சத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிப்போமாக!
நன்றி- இஸ்லாம் கல்வி.காம்,
அன்புடன்,
என்றும் அழைப்புப்பணியில்,
முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக