
சென்னை: வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சிப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமுமுக, மனித நேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் சென்னை கிழக்கு தாம்பரம் கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்,
தி.மு.க.வை சட்டமன்ற தேர்தலில் வீழ்த்த அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறுகையில்,
விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் பலம் வாய்ந்துள்ள எங்கள் கட்சிக்கு கணிசமான அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். அதற்கான பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.
நன்றி- தட்ஸ் தமிழ் .காம்
அதிமுகவுடன் கூட்டணியை மனித நேய மக்கள் கட்சியின் பொதுக் குழு உறுதி செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழு பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில்
தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், ஹாரூன் ரஷீத், ஜே.எஸ். ரிபாயி, எம். தமிமுன் அன்சாரி, குணங்குடி அனிபா உட்பட 4000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து வந்து பங்குக் கொண்டார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிடுவது என்ற மனிதநேய மக்கள் கட்சியின் உயர் நிலை குழுவின் முடிவிற்கு பொதுக் குழு ஏகமனதாக அங்கீகாரம் அளித்தது.
திமுக ஆட்சி தமிழகத்தில் அனைத்து அம்சங்களிலும் மக்கள் விரோத அரசாக மாறியுள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெற பாடுபடுவது என்றும் இப்பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில் நாடாளுமன்றக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இப்பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் இரும்புக் கரத்துடன் நடவடிக்கை எடுத்து ஜனநாயகம் பணநாயகமாக மாறாமல் காப்பாற்ற வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சட்டமியேற்றும் அவையில் உரிய பிரதிநிதித்துவம் பெற விகிதாச்சார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விலைவாசி உயர்வுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு பொருளாதாரக் கொள்கையே காரணம் என்று இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கச்சதீவை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி- 4TamilMedia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக