இந்தியாவில் தயாரான பி.எஸ்.எல்.வி - சி16 ராக்கெட், இயற்கை வளங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும், "ரிசோர்ஸ்சாட் -2' செயற்கைக்கோளை சுமந்தபடி,நாளை விண்ணில் பறக்கிறது. இதற்கான கவுன்ட் டவுண், நேற்று துவங்கியது.
பி.எஸ்.எல்.வி - சி16 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, நாளை (20ம் தேதி) காலை 10:12 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஐம்பத்து நான்கரை மணி நேர கவுன்ட் டவுண், நேற்று அதிகாலை 3:42 மணிக்கு துவங்கியது. அத்துடன் ராக்கெட்டில் இரண்டு, நான்காம் கட்ட திரவ எரிபொருள் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
மேலும், ராக்கெட் மற்றும் ஏவுதளம் ஆகியவற்றை, விஞ்ஞானிகள், இறுதி கட்டமாக ஆய்வு செய்து வருகின்றனர். எரிபொருள் அழுத்தம், மின்கலத்திறன் ஆகியவையும், ஏவுதளம், தகவல் இணைப்புகள் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டில், இயற்கை வளங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், "இஸ்ரோ'வால் தயாரிக்கப்பட்ட 1,206 கிலோ எடையுள்ள அதிநவீன, "ரிசோர்ஸ்சாட் -2' செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.
இத்துடன், இந்திய - ரஷ்ய தயாரிப்பில் உருவான 98 கிலோ எடை கொண்ட, விண்மீன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும், "யூத்சாட்' மற்றும், சிங்கப்பூர் தொழில்நுட்ப பல்கலை தயாரிப்பில் உருவான, 106 கிலோ எடை கொண்ட, "எக்ஸ் - சாட்' ஆகிய சிறிய ரக செயற்கைக்கோள்களும் இதில் செலுத்தப்பட உள்ளன. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், ராக்கெட்டை செலுத்துவதற்கு ஏற்ற, கால நிலை உள்ளதாகவும், "இஸ்ரோ' தெரிவித்துள்ளது.
கடந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. வரிசை ராக்கெட் தோல்வி அடைந்த நிலையில், இம்முறை விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. வரிசை ராக்கெட் வெற்றி பெறும் என, "இஸ்ரோ' விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக