குண்டுகளின் மழையில் தீக்குளித்த தியாக பூமியான பாலஸ்தீனத்தின் சமீபத்திய சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது.
1948ல் வஞ்சகமாய் வளைகுடாப் பகுதியில், மேற்கு சக்திகளால் வந்து திணிக்கப்பட்ட இஸ்ரேல் என்ற செயற்கை அரசு பாலஸ்தீனப் பகுதிகளை அபகரித்து மண்ணின் மைந்தர் களான பாலஸ்தீனர்களை நாடற்ற அகதிகளாக்கியது. வல்லரசுகளின் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டத்தை இரக்கமற்று நசுக்கியது இஸ்ரேல்.
யாசர் அராபத் எனும் தியாகத் தலைவன் பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தார். பாலஸ்தீன விடுதலை முன்னணி (பி.எல்.ஓ) உருவானது. விடுதலைப் போராட்டம் வலுவடைந்தது. அதே வேளையில் இஸ்ரேலும் வலிமைமிக்க சக்தியாக மாறியது.
நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் தனது மக்களுக்காக சமாதான உடன்பாட்டுக்கும் உடன்பட்டார் அராபத். 1993ல் இஸ்ரேலிய சக்திகளுடன் உடன்பாடு செய்து கொண்டார். சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் இஸ்ரேலின் ராஜ வியூகத்தை உடைத்தார். மிதவாதிகளிடம் செல்வாக்கு ஏறுமுகமாய் சென்றாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடைய மக்களிடம் தனது மதிப்பை அவர் இழக்க வேண்டிய தாயிற்று.
காலமெல்லாம் களத்தில் நின்றார். ராஜதந்திர ரீதியில் மேற்குலக சூழ்ச்சிகளை சுட்டெரித்தவரின் புகழ் ஒளி கொஞ்சம் மங்கத்தான் செய்தது. இருப்பினும் தனது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் விழுப்புண்களுடன் விழாமல் போராடினார். தாளத்துக்கு தலையாட்டாத ஆத்திரத்தில் இஸ்ரேல் அரசு அரபாத் தின் அலுவலகத்தின் மீதே குண்டு வீசியது. மிருகத்தனமாக மின் இணைப்பை கூட துண்டித்தது. தனது மக்களின் துன்பம் கண்டு மெழுகாய் உருகிய அந்த மனிதன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மக்கள் பணி ஆற்றினார். வஞ்சகத்தையே வாழ்க்கை பாதையாக கொண்டிருந்த யூதர்கள் மெல்ல மெல்ல கொல்லும் நஞ்சினை ஊட்டி படுகொலை செய்தனர். அராபத் மறைந்தார். ஆனால் ஃபதாஹ் மறையவில்லை. ஏதோ தானும் இருக்கிறேன் என்பதைப் போல அதன் செயல் பாடுகள் மந்த கதியில் இயங்கியது.
ஃபதாஹ் இயக்கத்தின் கூர்மை குறைந்த செயல்பாடுகளால் ஹமாஸ், பாலஸ்தீன அரங்கில் உதித்தது. அராபத்தின் காலத்திலே இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்த இயக்கமாக ஹமாஸ் உருவெடுத்தது. உலகெங்கும் வாழும் விடுதலைப் போராளிகளின் ஞானத் தந்தையான ஷேக் அஹ்மது யாசின் இளைஞர்களை வார்த்தெடுத்தார். ஹமாஸின் எழுச்சி, யூத ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது. வஞ்சகமாய் குண்டு வீசிக் கொன்றது. தொடர்ந்து வந்த ஹமாஸ் தலைவர் அப்துல் அஜீஸ் ரந்திஸியையும் படுகொலை புரிந்தது. ஹமாஸ் தனது உரிமைப் போராட்டத்தினை சளைக்காமல் முன்னெடுத்தது.மேற்குலகும் இஸ்ரேலும், இந்த சக்திகளின் அடியொற்றி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஹமாஸை பயங்கரவாத இயக்கம் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், நெஞ்சுருத்துடன் ஹமாஸ் ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது. அதன் அரசியல் ராஜதந்திரியுமான ஹாத் மிஷால் இஸ்ரேலின் சதிச் செயலை முறியடிக்கவும் தன்னை தற்காத்துக் கொள்ளவும், தற்போது சிரியாவில் வாழ்ந்து வருகிறார்.
ஹாலித் மிஷாலை கொலை செய்ய இஸ்ரேல் பலமுறை முயற்சிகளை மேற் கொண்டது. இறையருளால் அவர் இன்று வரை உயிர் பிழைத்து தனது மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் போராடி வருகிறார். சரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய ஹமாஸ் நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தது, பெருவாரியான வெற்றியும் பெற்றது. இஸ்மாயில் ஹனியா தலைமையில் அமைச்சரவை அமைத்தது. ஓர் நிழல் இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு வந்ததை வரவேற்க மனமின்றி அமெரிக்காவும், இஸ்ரேலும், மேற்குலகும் ஹமாஸிற்கு வாக்களித்த மக்களுக்கு பொருளாதார உதவிகளை முடக்கி பட்டினியில் தள்ளியது. வறுமையின் பிடியில் தள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஏனென்று கேட்க யாருமற்ற நிலையில் ஈரான் நிதியுதவி புரிந்தது. அது எப்படியோ பாலஸ்தீன அரசுக்கு போய்ச் சேர்ந்து விட்டது எனினும், பிற நிதி உதவிகள் யூத சக்திகளால் முடக்கப்பட்டன. அரசு ஊழியர் களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாமல் புதிதாகப் பதவியேற்ற ஹமாஸ் அரசு தவித்தது.
ஃபதாஹ் இயக்கத்துக்கும், ஹமாஸுக்கும் மோதல் வேறு ஏற்பட்டது. அரபுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நடுநிலை யாளர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். இதற்கிடையில் ஃபதாஹ், ஹமாஸ் மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாக உலக மக்களின் மன வேதனை அதிகமாகியது. ஏகாதிபத்திய சக்திகள் மகிழ்ச்சியில் கூத்தாடினர்.
அனைத்துக்கும் முடிவுரை எழுதும் முகமாக பாலஸ்தீனத்தில் சகோதர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
ஹமாஸ் நிர்வாகத்தில் உள்ள காசா மீது கடுமையான மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் பிரயோகித்தது. அதனை உலக நாடுகள் மற்றும் நடுநிலையாளர்கள் கடுமையாக கண்டித்தனர். இவ்வாறு வேதனை செய்திகளே பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்த சூழலில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கும் பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பதாஹ், ஹமாஸ் இரண்டு இயக்கங்களும் கூட்டாக அரசமைக்க ஓர் ஒற்றுமை ஒப்பந்தம் எட்டியிருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன.
இதன் மூலம் ஹமாஸ் பதாஹ் இடையே நிலவி வந்த நான்காண்டு பிணக்குகள் தேர்ந்து இணக்கம் நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சமாதான ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதும் வாகனங்களில் சென்றவர்கள் தங்கள் வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரம் ஒலிக்கச் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.பதாஹும் ஹமாசும் ஒரு தாய் மக்கள் இனி வேறுபாடு கிடையாது என முழங்கினர். தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் உணவகங்களில் தேநீர் காபி மற்றும் பழரசங்கள் இலசமாக சாலைகளில் சென்றோருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
இதற்கு நேர்மாறாக, இஸ்ரேல் தரப்பில் விரக்தியும் ஆத்திரமும் பொங்கி வழிந்தது.பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வெளிப் படையாக தனது எரிச்சலை வெளிப்படுத்தி னார். பாலஸ்தீன நிர்வாகம் அமைதி யை விரும்புகிறதா அல்லது ஹமாஸை விரும்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்த பதாஹ் நிர்வாகி ஒருவர், இஸ்ரேல் அமைதியை விரும்புகிறதா? அல்லது இனவெறியை நிலை நிறுத்த பாலஸ்தீன மக்களின் நிலத்தில் குடியிருப்புகளை மேலும் மேலும் உருவாக்க விரும்புகிறதா? என்று வினவினார்.
இஸ்ரேல் ஹமாஸை அங்கீகாரம் செய்யவில்லை; ஹமாஸ் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இது பாலஸ்தீன அரசியல் அரங்கில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளி ஹோஸ்னி முபாரக் வீழ்த்தப்பட்ட பிறகு இஸ்ரேலுக்கு ராஜதந்திர ரீதியில் கிடைத்த மிகப்பெரிய அடியாக இது கருதப்படுகிறது. காரணம் இந்த ஒற்றுமை ஒப்பந்தத்தில் எகிப்து அரசு முக்கியப் பங்கு வகிக்கிறது. எகிப்தின் வெளியுறவு அமைச்சர் சென்றவாரம் பாலஸ்தீன நகரான ரமல்லாவில் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து உடன்பாடு எட்டப்பட முக்கியப் பங்காற்றினார்.
இந்நிலையில் இஸ்ரேலிய நிதி அமைச்சர் யுவால் ஸ்டை நிட்ஸ் செய்த ஒரு தகாத காரியம் பாலஸ்தீன மக்களின் கொதிநிலையை அதிகரித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு சேர வேண்டிய88 மில்லியன் அமெரிக்க டாலர்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. 2001 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீன அத்தாரிட்டிக்காக வருடம் தோறும் 100 கோடி டாலர்கள் இஸ்ரேல் வரி வசூல் செய்யவேண்டும். அதன்படி இஸ்ரேல், கஜானாவில் இருந்த நிதியினை முடக்கி வைத்துள்ளது. இந்த நிதி இறுதியில் பயங்கரவாத (?) ஹமாஸ் அமைப்புக்கு தான் செல்லும், எனவே இதனை முடக்க வேண்டியதாயிற்று என்று இஸ்ரேல் சப்பைக் கட்டு கட்டியுள்ளது.
இஸ்ரேலின் இது போன்ற அச்சுறுத்தல்கள் சமாதான முயற்சிகளை முடக்கி வைத்துவிட முடியாது என பாலஸ்தீன பிரதமர் சலாம் ஃபாயத் தெரிவித்திருக்கிறார்.
இது அப்பட்டமான வழிப்பறி என பாலஸ்தீன விடுதலைப் போராட்ட அமைப்பின் நிர்வாகக் குழு கண்டித்துள்ளது.
இஸ்ரேல் தனது போரை புதிய பாணியில் தொடங்கியுள்ளது. அதனை பாலஸ்தீன மக்கள் ஒன்றுபட்டு முறியடிப்பார்கள் என ஹமாஸ் அறிவித்திருக்கிறது.
-அபுஸாஸிஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக