ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியப் பணிக்கு பி.காம் பட்டதாரிகளையும் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் ஆசிரியப் பணிக்கான தேர்வை எழுத வேண்டியிருக்கும்.
ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்சத் தகுதி என்ன என்று கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பித்திருந்த போது, பி.ஏ., மற்றும் பி.எஸ்.ஸி., ஆகிய பட்டப் படிப்பு படித்தவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று அவருக்குப் பதில் அளிக்கப்பட்டது.
நாட்டிலேயே அதிகமானோர் விரும்பிச் சேரும் பி.காம்., பட்டப்படிப்பு ஆசிரியப் பணிக்கான தகுதியில் இல்லாதது பி.காம் பட்டதாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பி.காம் பட்டப்படிப்பையும் ஆசிரியப் பணிக்கான தகுதியில் இணைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனிதவளத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான குறைந்த பட்ச தகுதியில் பி.காம் பட்டத்தையும் இணைக்க வேண்டும் என்று மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் மற்றும் பலரும் ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய ஆணையத்தியிடம் முறையிட்டனர். எனவே, ஆசிரியப் பணிக்கான குறைந்த பட்சத் தகுதிகளில் பி.காம் பட்டத்தையும் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அரசு அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக