தமிழ் நாடு காவல்துறை டைரக்டர் ஜெனரல் போலோநாத் செய்தியாளர்களிடம் நேற்று செவ்வாய் அன்று கூறியதாவது: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் 91 கட்டிடங்களில் 234 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த மையங்களில், ஓட்டு எண்ணிக்கை பணிகள் எந்த அளவிலும் பாதிக்காத வகையில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 27 துணை இராணுவப்படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 18 இராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு விமானம் மூலம் புதன் கிழமை அன்று வந்து சேருவார்கள். அங்கிருந்து அவர்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு முன், ஓட்டு எண்ணிக்கை மையங்களில், வெடிகுண்டு, வெடிமருந்து தவிர மற்ற பிற நாச செயல்களை முறியடிக்கும் வகையில், சிறப்பு காவலர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்படும். ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையங்களிலும், குறைந்தபட்சம் 12 துணை இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள். இதற்கு மாவட்ட காவல்துறை ஆணையர் அளவிலான காவல்துறை அதிகாரி கண்காணிப்பில் இருப்பார்.
அனைத்து மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மையங்களில் போதுமான விளக்கு வெளிச்சத்திற்கான ஏற்பாடுகளும், தீ அணைப்பு வண்டிகள் நிற்பதற்கான ஏற்பாடுகளும் செயப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பாக தேர்தல் கமிஷனின் அனைத்து விதிமுறைகளின் கீழ் செயல்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வீடியோ கான்பிரன்சிங் முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி அலுவலகங்கள், வேட்பாளர்கள் அலுவலகங்களுக்கும் போதிய பாதுகாப்பு கொடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் வராது. அவ்வாறு வந்தாலும் அதை திறம்பட முறியடிக்கும் வகையில் போலீசார் தயார் நிலையில் இருப்பர்.
முடிவுகள் வெளியான பிறகு ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். எப்படிப்பட்ட அவசர நிலை வந்தாலும் அதை சமாளிக்க போதுமான பலம் எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு டி.ஜி.பி., போலோநாத் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக